கணினி பயன்பாட்டுக்கு வந்தபோது தமிழ் விரைவில் அழிந்துவிடுமோ என்ற நிலைதான் இருந்தது. அதனால் ஆங்கில மோகம் அதிகரிக்கத் துவங்கியது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு மட்டுமே உலகில் வேலை வாய்ப்புகள் அதிகம் , கணினியில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற மாயையில் மக்கள் சிக்கித் தவித்தனர். குறிப்பாக தமிழர்கள் ஆங்கில வழிக் கல்வியையும், ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை மட்டுமே தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக அணுகினார்கள்.
தமிழார்வலர்களும், பற்றாளர்களும், பொறியியலாளர்களும் ஆற்றிய பெரும்பணி காரணமாக கணினியில் மெல்ல மெல்ல தமிழ் தலைக்காட்டத் தொடங்கியது.
அலைபேசியில் தமிழ் வளர்ப்போம் |
இணையத்தில் தமிழ் உலா வரத் தொடங்கியது. கணினி மூலம் தமிழ் உயிர் பெற்று வளரத்தொடங்கியது. வளர்ந்துகொண்டும் உள்ளது.
தமிழுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றிய அந்த கணினிநுட்ப வல்லுநர்களை பாராட்டுவோம்.
கணினிக்கு அடுத்து மிகப் பிரபலமாகிக்கொண்டிருப்பது ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் சாதனங்கள். இனி எதிர்காலம் இதன் கையில்தான் என்பது தெளிவு.
கணினியில் செய்யத்தக்க அனைத்து வேலைகளையும் இதன் மூலமே செய்ய முடியும் என்பதால் அடுத்த தலைமுறையில் கையடக்கப் அலைபேசிகளே அதிகம் இருக்கும்.
அலைபேசியில் தமிழ்:
அலைபேசியில் தமிழ் இருக்கிறதா? என்றால் ஆரம்ப காலத்தில் அலைபேசியில் தமிழ் இல்லை. ஆனால் தற்பொழுது அந்த வசதிகளையும் கொண்டு வந்துவிட்டனர்.
ஆனால் அலைபேசியில் தமிழைப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு சில அலைபேசிகளில் தமிழ் சரியாக தொழிற்படாமல் இருப்பதும்.. அதில் எழும் சிக்கல்களுமே காரணமாக இருந்தது.
இது பற்றிய பதிவுகள் ஒன்றிரண்டு இணையத்திலும் உலாவந்துகொண்டுதான் உள்ளன. தமிழ் எழுத்துரு பிரச்னைகளைத் தீர்க்க உங்களுக்கு அப்பதிவுகள் உதவும்.
ஆனால் தற்பொழுது அதற்குத் தீர்வுகளும், நவீன அலைபேசிகளில் தமிழ்மொழி ஆதரவும் வந்துவிட்டன.
தமிழ் வளர்ச்சியில் அலைபேசி நிறுவனங்களின் பங்கு:
தமிழ்மொழியை கணினியில் பயன்படுத்துவதையும், அதனுடைய வளர்ச்சியையும் கண்ணுற்ற அலைபேசி நிறுவனங்கள், அடுத்தக்கட்ட அடுத்த தலைமுறைச் சாதனமான அலைபேசியிலும் தமிழ்மொழியை கொண்டுவந்தால்தான் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று அறிந்துகொண்டது. அதன் விளைவாக அலைபேசியை தமிழிலேயே இயக்கும் முறைமையை கொண்டு வந்தது. தற்பொழுது சமீப காலமாக வெளிவந்திருக்கும் சாம்சங். நோக்கிய போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த வசதிகளை நாம் காண முடிகிறது.
இதனால் பாமரரும் அந்த சாதனங்களை வாங்கி செயல்படுத்தலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
தொன்றதொட்டு வளர்ந்து வரும் தமிழ் இயல், இசை, நாடகம் என வளர்ந்துகொண்டபோதிலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் அதன் வேகம் விரைவுபடுத்தப்பட வில்லை என்றுதான் கூற வேண்டும்.
கணனியில் தமிழைப் பயன்படுத்த ஆரம்பித்தபோது வேகம் கூடியதுபோல் தோற்றமளித்தாலும், படிப்படியான அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த வேகம் போதுமா என்று சிந்திக்கையில் அடுத்த கட்ட தொழில்நுட்ப சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்துவதே அதனுடைய சீரிய வளர்ச்சியை நாம் பெற முடியும் என்பது தெளிவாகிறது.
அதனால் அடுத்த தலைமுறைக்கும் தமிழைக் கொண்டுச்செல்ல வேண்டுமெனில் கட்டாயம் அலைபேசியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும். புதிய அலைபேசி வாங்கும் ஒவ்வொருவரும் அதில் தமிழ்மொழி ஆதரிப்பு உண்டா என கேட்டு வாங்குவோம்.
ஆங்கிலத்தைப் போன்றே தற்பொழுது தமிழையும் அலைபேசியில் தட்டச்சு செய்யக்கூடிய மென்பொருள்கள் வந்துவிட்டன. அழகு தமிழில் குறுந்தகவல்கள் அனுப்பலாம்.. அலைபேசியின் மூலம் இணையத்தைப் பயன்படுத்தும்பொழுது அதில் தமிழையும் பயன்படுத்துவோம்.
மற்ற எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழுக்கு உண்டென்பதை வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் பயின்று தமிழ் வளர்த்ததைக் கொண்டே (வீரமாமுனிவர், ஜி.யு.போப், பார்த்தலோமியோ சீகன் பால் ) நம் தமிழின் பெருமையை நாம் அறியலாம்.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வளர்ந்து, வாழ்ந்து வரும் நாம் தமிழை வளர்க்க வேண்டாமா?
இதுவரைக்கும் தமிழுக்காக என்ன செய்தோம் என்று சிந்திப்போம். சிறப்பாக ஏதும் செய்ய முடியவில்லை என்றாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட நாம் அந்தச் சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.
அலைபேசியில் தமிழ் எழுதுவோம். தமிழைப் பயன்படுத்துவோம்..தமிழை வளர்ப்போம்... !!!
நன்றி
- தங்கம்பழனி