வணக்கம் நண்பர்களே..!
சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் "சாதிக்க இது போதுமா" தொடரை எழுதுகிறேன்.
கடந்த பதிவில் "இழக்க கூடாதது எது?" என்ற தலைப்பில் பதிவு அமைந்தது. அதில் வெற்றிபெற்று சாதனை செய்வதற்கு சில சமயம், சில நொடிகளில் "தன்மானத்தை" கூட இழக்கலாம் என்று எழுதியிருந்தேன்.
தன்மானத்தை இழந்து பெறும் வெற்றி, அதனால் வரும் பெயரும் புகழும் இறந்த சடலத்தின் மீது சாற்றப்பட்ட மாலையைப் போன்றது என்று பகுத்தறிவாளர் திரு. பழனிச்சாமி அய்யா அவர்கள் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு நான் கொடுத்த விளக்கத்திற்கு அவர் பதிலெதுவும் இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை.
இன்றைய பதிவில் "எது கூடாது" என்பதே தலைப்பு...? தலைப்பின் விரிவாக்கம் எதைச் செய்யக் கூடாது என்பதே... வெற்றிப் பெற வேண்டுமெனில், சாதனை செய்ய வேண்டுமெனில் நிறைய "கூடாது" பட்டியல்கள் இருக்கின்றன.
பொதுவாகச் சொல்வதெனில் கெட்டப் பழக்க வழக்கங்கள் கூடாது. சினிமா, டி,வி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், வெட்டி அரட்டை அடித்தல்.. புறம் பேசுதல்... பெண்களிடம் கேலி, கிண்டல்.. அடுத்தவரிடம் அடாத செயல்கள்கள் செய்வது (ரவுடிதனம்), தீவிர வாதம்.. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..
இவை அனைத்துமே நமக்குத் தெரியும். ஒரு உண்மையான வெற்றியாளன், சாதனையாளனாக.. அவை அனைத்தையும் விட முக்கியமாகச் செய்ய கூடாதது ஒன்று உள்ளது. அதற்கு முன்பு இச்சிறு சம்பவத்தை படியுங்கள்.
ஒரு இளைஞன். நன்றாக போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தான். போட்டித் தேர்வுக்கான நாளும் அறிவித்து, அதற்கான விண்ணப்பமும் கொடுத்துவிட்டார்கள். விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு மாதகால அவகாசம் இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளையும் வீணாக்கமல் தொடர்ந்து படிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.. படிப்பதிலிருந்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டான்.. இடையே விண்ணப்பம் அனுப்ப வேண்டுமே என்று நினைவு வந்தாலும், "அதற்குத்தான் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதே" என்று நினைத்துக்கொண்டு, மீண்டும் தன்னுடைய கவனத்தை முழுவதும் போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துவதிலேயே இருந்தான்... நன்றாக தயார்படுத்தி எப்படியும் இந்த முறை அரசாங்க பணி வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே அவனுடைய குறிக்கோள் இருந்தது.. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாளும் வந்தது... இன்னும் இருப்பத்தி நான்கு மணி நேரம் இருக்கிறது. மதியத்திற்கு மேல் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான்.. அங்கு சென்று பார்க்கும்போதுதான் இன்னும் விண்ணப்பமே நிரப்பாமல் இருப்பது புரிந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது. அதற்குள் நிரப்பி அனுப்பிவிடலாம் என்று அவசர அவசரமாக விண்ணப்பத்தினை நிரப்பினான். அவசரம், பதற்றம் அவனை தொற்றிக்கொண்டது.. எப்படியோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டான். இறுதியாக ஒன்றை கவனித்தான்.. விண்ணப்பத்தில் அவனுடைய போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் காலியாக இருந்தது. "அடடா.. போட்டோ எடுத்து வர மறந்துவிட்டோமே.." என்று நினைத்துக்கொண்டே போட்டோ ஸ்டூடியோ எங்கிருக்கிறது என விசாரித்தான். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி ஒரு போட்டோ ஸ்டுடியோ இருப்பதாக சொன்னார்கள். பத்தே நிமிடத்தில் போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என்று தன்னுடைய "டூவிலரை" எடுத்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பைக்கை நகர்த்தவே முடியவில்லை. டூவீலர் முன் பக்க சக்கரத்தில் காற்றே இல்லை... தலையலடித்துக்கொண்டு, வழியில் சென்றவரிடம் "லிப்ட்" கேட்டு அங்கு சென்று போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்து அதை ஒட்டிவிட்டான். கடைசியில் அரைமணி நேரமே இருந்தது.. அரைமணி நேரத்தில் அஞ்சல் அலுவலகத்தை மூடிவிடுவார்கள். அதற்குள் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்து அஞ்சலகத்திற்கு அடைந்தான். விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கு முன்பு "ஒரு முறை விண்ணப்பத்தை சரிபார்த்துவிடலாம்" என்று பார்க்கும்பொழுதுதான் அவனுக்கு மிகப்பெரிய ஒரு பேரிடி காத்திருந்தது.. அப்படியே சரிந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான். அப்படி என்னதான் அந்த விண்ணப்பத்தில் இருந்தது ? விண்ணப்பதாரரின் பெயர் என்ற இடத்தில் இளைஞனுடைய அப்பாவின் பெயர் இருந்தது. |
ஒரு சிறிய வேலைதான். சிறிது நேரத்திலேயே முடிந்துவிடக்கூடியது. ஆனால் அதனுடைய முக்கியத்துவமோ பன்மடங்கு அதிகம். இளைஞனின் "தள்ளி"ப் போடும் மனப்பான்மையால் வந்த வினையை பார்த்தீர்களா?
இப்படி, "இன்னும் சிறிது நேரம் கழித்து செய்யலாம்..", "நாளை செய்யலாம்.. இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறதே..", "அடுத்த வாரம் செய்யலாம்..", "அடுத்த மாதம்தானே அதற்கு கடைசி நாள்.. அதனால் இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து செய்துகொள்ளலாம்" என்று ஒரு சிலர் தாம் செய்யவிருக்கும் முக்கியமான செயல்களிலும், அதனுடைய முக்கியத்துவம் உணராமல் "தள்ளி"ப் போட்டுக்கொண்டே செல்வார்கள்..
இதுதான் செய்ய கூடாது...
ஒரு செயலைச் செய்யவேண்டுமெனில் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு அதனை முடித்துவிட வேண்டும்.
சாதிக்க இது மட்டும் போதுமா என்ன? வேறென்ன வேண்டும்..? அடுத்த பதிவில் தொடர்ந்து சந்திப்போம்...
நன்றி.
சாதிக்க இது மட்டும் போதுமா என்ன? வேறென்ன வேண்டும்..? அடுத்த பதிவில் தொடர்ந்து சந்திப்போம்...
நன்றி.
- தங்கம்பழனி