கடந்த பதிவில் 'மரம் போல் இரு' என கூறியிருந்தேன். மரத்தைப் போன்று இழக்க வேண்டியதை இழந்து, பிறகு தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளலாம் என்பதே பதிவின் சுருக்கமாக அமைந்திருந்தது. படிக்காதவர்கள் இணைப்பைச் சொடுக்கி படித்துவிட்டு தொடருங்கள்.
மனிதர்களாக நாம் 'எதை இழக்க வேண்டும்?'
இழக்க வேண்டியது எனப் பார்த்தால் வெற்றியைத் தவிர மற்றவைகளை அனைத்தையுமே இழக்கலாம். இலக்கு எதுவோ அதை நோக்கி பயணிக்கும்போது, அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் இழந்துதான் ஆக வேண்டும்.
எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். இன்று முக்கியமான பைனல் மேட்ச்.. அதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், அடுத்த நாள் வரவிருக்கும் முக்கியமான போட்டித் தேர்வில் நீங்கள் நன்றாக தேர்வுக்கு தயாராகி இருந்தாலும் அந்த ஒருநாள் இரவில் நடக்கும் போட்டியால் கண்டிப்பாக உங்களுடைய மனம் சிதைந்துவிடும்.
உங்களுக்குப் பிடித்த நடிகரின் படம் ரிலீசாகிறது. முதல்நாளே படத்தைப் பார்த்துவிடுபவர் நீங்கள். இந்த முறையும் முதல்நாளே படத்தை பார்க்க சென்றுவிட்டீர்கள். படத்தின் வெற்றி தோல்வி, கதையைப் பொறுத்து உங்களுடைய மனநிலையில் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும்.
இத்தகைய மாற்றங்கள் ஆரோக்கியமானதல்ல..
இவ்வாறு ஒவ்வொரு "பொழுதுபோக்கு" அம்சங்களும் ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அது மட்டுமா? அதனுடைய தாக்கம் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது மனதை விட்டு அகலாமல் இருக்கும்.
சினிமா, விளையாட்டு மட்டுமல்ல.. இணையமும் இன்று பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்கு களமாக மாறிவிட்டது. குறிப்பாக சமூக தளங்களில் நேரத்தை செலவழிப்போர் அதிகம். நாள் முழுவதும் கணினியின் முன்பு அமர்ந்துகொண்டு இவர்கள் கழிக்கும் பொழுதுகள் அனைத்துமே வீணாக போகிறது. இணைய உலாவல் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அதிகமாகும்போது நாள் முழுவதையும் அது விழுங்கிவிடுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களை முதன்மையாக வைத்துகொண்டு, இன்றும் தம்முடைய வாழ்நாளை வெறுமையாக கழித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் ஏராளம்.
முதலில் நீங்கள் இதுபோன்ற அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் 'பொழுது போக்கு' அம்சங்களை கண்டிப்பாக இழுந்துதான் ஆகவேண்டும்.
சாதிக்க இது போதுமா?
இல்லை...
உங்களிடமிருந்தும் நீங்கள் இழக்க வேண்டியவைகள் இன்னும் நிறைய உள்ளது. அது என்னென்ன?
அடுத்த பதிவில் பார்ப்போமே?
-தங்கம்பழனி
தொடரும்..