வளர்ந்து வரும் மொபைல் கலாச்சாரத்தில் இன்று சிக்கித் தவிக்கும் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான்.
மொபைலின்றி ஒரு நிமிடம் கூட இவர்களால் இருக்க முடியாது என்ற ஒரு நிலைமை உருவாகிவிட்டது. எங்கும் எதிலும் எப்போதுமே மொபைல்தான்.
சாதாரணமாக கூப்பிடுதூரம் இருக்கும் ஒரு நண்பரை அழைக்கவும் கூட மொபைலை பயன்படுத்துகிறார்கள். இரவெல்லாம் கண்விழித்து பேசுவதும், செல்போனிலேயே அரட்டை அடிப்பதும் இவர்களின் பொழுது போக்கு.
செல்லுமிடங்களிலெல்லாம் கூட தான் சென்ற வேலையை கவனிக்காமல் கூட மொபைலில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. வீடு, அலுவலகம், பார்க், பீச், ரெஸ்டாரன்ட் இப்படி எந்த இடமானாலும் ஒரு நிமிட நேரம் கிடைத்தால் கூட போதும். உடனே மொபைலை எடுத்து ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
- பாதையை கவனிக்காமல் நடந்துக்கொண்டே செல்போனை பயன்படுத்துவது...
- படியில் ஏறிக்கொண்டே SMS அனுப்புவது, SMS அனுப்புவது..
- மொட்டை மாடியில் நடந்துகொண்டே மணிக்கணக்கில் பேசுவது...
குறிப்பாக வாகனம் ஓட்டும்போது உயிருக்கே ஆபத்து விளைக்கும் என்று தெரிந்தும் கூட சாதாரணமாக மொபைலைப் பயன்படுத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இதுபோன்றவர்கள் விபத்தைச் சந்தித்து, என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கு முன்பே உயிரை விட்டுவிடுகிறார்கள். சிலர் உயிர் தப்பித்த பிறகுதான்.. வலியை உணர்ந்த பிறகுதான் இனிமேல் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
உதாரணமாக இந்த சம்பவத்தைப் பார்ப்போம்.
தேசிய நெடுஞ்சாலையில் மொபைலை காதிற்கும் தோல்பட்டைக்கும் இடையில் வைத்துக்கொண்டு கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து வைத்துக்கொண்டு சென்ற ஒரு இளைஞன் விபத்தில் இறந்துவிட்டான். அவனுடைய இறப்புக்கு அவன்தான் காரணம். தன்னுடைய உயிருக்கு அவனே எமனாகிவிட்டான்.
பின்னால் வேறொரு பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அந்த காட்சியைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக 108 ற்கு போன் செய்து பேசி ஆம்புலன்சை வரவழைத்தார்கள்.
ஆம்புலன்ஸ் வந்து இறந்த இளைஞனை தூக்கிக்கொண்டு போனது. தகவல் தெரிவித்த இளைஞனை நினைத்துப் பெருமைபட்டுக்கொண்டிருக்கும்போதே, அவன் அவனுடைய பைக்கை (Bike) ஸ்டார்ட் செய்து அமர்ந்தான்..
மொபைலை காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் வைத்து இடுக்கிக்கொண்டு,
"மச்சான் இங்க ஒரு பயங்கரமான ஆக்சிடெண்ட்டா.. ஆள் ஸ்பாட் அவுட்.. நான்தான் 108க்கு போன்பண்ணினேன்" என்று பேசிவாறே பைக்கை "விர்ர்"ரென்று செலுத்த ஆரம்பித்தான்..
என்ன சொல்வது? ஒருவன் செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் சாலைவிபத்தில் இறந்துவிட்டான். அதைக் கண்ணால் கண்டு, உணர்ந்து தகவலைச் சொன்னவன் மீண்டும் அதே தவறையே செய்கிறான்.
இதுதான் மொபைல் மேனியா (mobile-mania) என்பது.. பழக்க தோஷம்...
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றொரு பழமொழி உள்ளது.. தொட்டில் பழக்கம் மட்டும் அல்ல.. இதுபோன்ற செல்போன் பழக்கமும் சுடுகாடு மட்டும் தான்..
எனவே உங்களை முதலில் உணருங்கள்.. நீங்கள் செய்யும் செயலால் என்ன கேடு ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்...அதை தவிர்க்க முயற்சி எடுங்கள்.. மற்றவர்கள் செய்யும் தவறுகளிலிருந்து நீங்களும் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்..ஒவ்வொரு முறையும் அதுபோன்ற தவறை நீங்களும் வாழ்க்கையில் தவிர்க்கும்போது தானாகவே இதுபோன்ற "மொபைல் மேனியா"க்கள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.
எனவே உங்களை முதலில் உணருங்கள்.. நீங்கள் செய்யும் செயலால் என்ன கேடு ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்...அதை தவிர்க்க முயற்சி எடுங்கள்.. மற்றவர்கள் செய்யும் தவறுகளிலிருந்து நீங்களும் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்..ஒவ்வொரு முறையும் அதுபோன்ற தவறை நீங்களும் வாழ்க்கையில் தவிர்க்கும்போது தானாகவே இதுபோன்ற "மொபைல் மேனியா"க்கள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.
-தங்கம்பழனி